Tuesday 14 April 2015

Herb Trimpe அன்னாருக்கு அஞ்சலி

டியர் காமிரேட்ஸ்,

சிறுவயதிலிருந்தே திகில் காமிக்ஸ் இதழ்களில் கருப்புக் கிழவியின் கதைகளை படித்து வளர்ந்ததால் பின்னாளில் அதைப்போன்ற கதைகளையே தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். அப்போது அறிமுகமான ஒரு தொடர்தான் போரிஸ் கார்லோஃப். இந்த புத்தக தொடரும் வழக்கம் போல சிறு கதைகளையே கொண்டது. 4 முதல் 8 பக்கம் வரை கொண்ட திகில் கதைகளின் தொகுப்பாக வெளிவந்துக்கொண்டு இருந்த இதழ் அது.

இந்த தொடரின் ஆரம்ப கால ஒரு கதையில் ஒரு குறிப்பிட்ட கதையும், ஓவியமும் வித்தியாசமாக இருக்க, அப்போதுதான் அறிமுகமானார் ஹெர்ப் ட்ரிம்ப். இவரது பல படைப்புகளை, வரைந்தவர் இவர்தான் என்பது தெரியாமலேயே படித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் கதையையும், ஓவியத்தையும் தான் கவனிப்போமே தவிர, ஒவியர் யார்? கதாசிரியர் யார்? எடிட்டர் யார்? என்றெல்லாம் பார்த்தது கிடையாது.

நேற்றிரவு இந்த தகவல் வந்தடைந்தது - ஹெர்ப் ட்ரிம்ப் காலமானார். நம்பவே முடியவில்லை. சமீபத்தில் தான் (2008ல்) இவர் ஒரு எட்டு பக்க எக்ஸ் மென் கதையை வரைந்து அழகு சேர்த்திருந்தார்.

Herb Trimbe 13th April 2015

இவர் முதன்முதலில் ஹல்க் கதாபாத்திரத்தை தொடர்ந்து வரைந்து அதை பிரபலமாக்கினார். ஒரு காலகட்டத்தில் ஹல்க் என்றாலே ஹெர்ப் ட்ரிம்ப் தான் நினைவுக்கு வரும் அளவுக்கு இவரது பாணி இருந்தது. பின்னர் பல கதாபாத்திரங்களை வரைந்த இவர், இன்றளவும் நினைவுகூறப்படுவது ஒரு சூப்பர் ஸ்டாரை முதன்முதலில் வரைந்தவர் இவர் என்பதாலேயே.

அக்டோபர் 1974. Hulk தொடரில் The Incredible Hulk என்ற கதை வரிசையில் 180ஆவது இதழின் இறுதியில் ஹல்க் கதாபாத்திரத்துக்கு ஒரு வித்தியாசமான எதிரி தேவைப்பட, கதாசிரியர் லீ வெய்னும், ஓவியர் ஜான் ரோமிடா சீனியரும் சேர்ந்து ஒரு கதாபாத்திரத்தை டிசைன் செய்ய, அதற்கு உயிர் கொடுத்தார் ஹெர்ப் ட்ரிம்ப்.

Herb Trimbe Art 13th April 2015

மார்வெல் காமிக்ஸ் திவாலான உடன் இவர் மறுபடியும் கல்லூரியில் சேர்ந்து, பல வருடங்களுக்கு முன்பாக கைவிட்ட ஓவியப்படிப்பை முடித்து, ஒரு ஓவிய ஆசிரியரானார். இவரது சகோதரன் மைக் ட்ரிம்ப் மற்றும் இவரது மகன் அலெக்ஸ் ட்ரிம்ப் ஆகியோரும் ஓவியர்களே.

அன்னாருக்கு அஞ்சலி.

1 comment: